டெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இந்தியா வந்த அவர், வெளியுறவுதுறை ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள், தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்து விவாதிக்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்பின்னர் இருநாடுகளுக்கும் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, நாகை – இலங்கை இடையே கப்பல் சேவை, யுபிஐ பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் கையெழுத்தானது.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த ஆண்டு இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல சவால்களை எதிர்கொண்டனர். மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது. இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று இனைந்தவை. கடல்வழி, விமானப் போக்குவரத்து, எரிசக்தி வர்த்தகம், சுற்றுலாத்துறை, திறன் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் 2 நாடுகளின் உறவு மிக முக்கியமானது.
இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே, பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.