சிங்கப்பூர்: சமூக வலைதளத்தில் இனவெறி செய்திகளை பகிர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ராப் பாடகருக்கு சிங்கப்பூர் அரசு ஒன்றரை மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராப் பாடகரான சுபாஷ் கோவின் பிரபாகர் நாயர், கடந்த 2019 ஜூலை மாதம் முதல் 2021 மார்ச் வரையிலான கால கட்டத்தில், சமூக வலைதளமான யூ டியூபில், தவறான நோக்கத்துடன் இனம் மற்றும் மதவெறி செய்திகளை பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த மாவட்ட நீதிபதி ஷைபுதீன் சருவான் தவறான உள்நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் ராப் பாடகர் பதிவிட்ட கருத்துகள், குறிப்பிட்ட இனம் மற்றும் மதத்தவரை மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதிப்பதாக உள்ளதாக கூறி, அவருக்கு ஒன்றரை மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.