புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால் வரும் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படையில் இணைய உள்ளது. இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை தயாரிக்க கடந்த 2016ம் ஆண்டு இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக இரண்டு போர்க்கப்பல்களை மட்டும் ரஷ்யாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ரஷ்யாவின் கடலோர நகரமான கலினின்கிராட்டில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் போர்க்கப்பல்களை தயாரிக்கும் பணி 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பணிகள் நிறைவுபெற்ற நிலையில், இரு கப்பல்களின் வௌ்ளோட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து 3,900 டன் எடை, 409 அடி நீளம், 50 அடி உயரம் கொண்ட துஷில்(பாதுகாவலன்) எனப் பெயரிடப்பட்ட போர்க்கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமால்(வாள்) எனப் பெயரிடப்பட்டுள்ள ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் வரும் ஜூலை 1ம் தேதி ரஷ்யாவின் கலினின்கிராடின் யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.