நன்றி குங்குமம் தோழி
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த வாரம் முடிவடைந்தது. இதில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்று 4வது இடத்தைப் பிடித்திருப்பதுடன், 72 ஆண்டுகால ஆசிய விளையாட்டு வரலாற்றில், முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனையும் படைத்துள்ளது.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 655 வீரர்,வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று, ஒவ்வொரு நாளும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வந்தனர். பதக்கம் வென்றவர்களில் தடகளம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளாக இருந்தன.
இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதலில், 25 மீ பிஸ்டல் குழு போட்டியில் மனு பாக்கர், இஷா சிங், ரிதம் சங்வான் ஆகிய மூவரும் 1759 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றனர்.50 மீ ரைபிள் 3 நிலைகள் தனிநபர் இறுதிப் போட்டியில் சிஃப்ட் கவுர் சாம்ரா தங்கப் பதக்கத்தை வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பாலக் 242.1 மதிப்பெண்களுடன், சக இந்திய வீராங்கனையான இஷா சிங்கை தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்தார். இஷா 239.7 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் ட்ராப் குழுப் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது.
பெண்களுக்கான 5000 மீட்டர் தடகளத்தில் பாருல் சவுத்ரி 15:14:75 நிமிடங்களில் தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஜோதி யர்ராஜி வெள்ளி வென்றார். மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹ்ரமிலன் பெயின்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் அண்ணு ராணி 62.92 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் வட்டு எறிதலில் சீமா புனியா 58.62 மீட்டர் தூரம் வட்டை எறிந்து வெண்கலம் வென்றார். மகளிர் ஹெப்டத்லானில் நந்தினி அகசரா வெண்கலம் வென்றார். கோல்ஃப் ஆட்டத்தில் அதிதி அசோக் வெள்ளி வென்றார். மகளிர் குத்துச்சண்டை 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன் வெண்கலம் வென்றார்.
வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் தென்கொரிய வீராங்கனையை 149-145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஓஜாஸ் டியோடேல் மற்றும் ஜோதி சுரேகா வென்னம், 159-158 என்ற கணக்கில் கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றனர்.
பெண்கள் கூட்டு வில்வித்தை இறுதிப் போட்டியில் சீன தைபேயை 230-229 என இந்தியா தோற்கடித்தது. ஜோதி சுரேகா வென்னம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகிய மூவரும் தங்கப் பதக்கத்தை வென்றனர். வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலம் வென்றார்.
குதிரையேற்றம் மிக்ஸ்ட் நால்வர் அணியில் அனுஷ் அகர்வாலா, ஹிருதய் விபுல் சேடா, சுதிப்தி ஹஜேலா மற்றும் திவ்யகிருதி சிங் ஆகியோர் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தனர். குதிரையேற்றம் டிரெஸ்ஸேஜ் தனிநபர் இடைநிலைப் போட்டியில் அனுஷ் அகர்வாலா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில், ஹர்திந்தர்பால் சிங் சந்து, தீபிகா பல்லிக்கல் ஜோடி மலேசியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் தங்கப் பதக்கத்தை வென்றது. டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ரோஹன் போபண்ணா- ருதுஜா போசலே, என் சுவோ லியாங்-சுங்-ஹாவ் ஹுவாங்கை வீழ்த்தி தங்கம் வென்றனர்.
மகளிர் கபடிப் போட்டியில் சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதுசெஸ் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி, ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 2 – 1 என்ற கோல் கணக்கில் வெண்கலப் பதக்கம் வென்றது.
தொகுப்பு: மணிமகள்