கடையநல்லூர்: ஒவ்வொரு இந்தியனின் தலையின் மீதும் லட்சக்கணக்கில் கடன் சுமை உள்ளது என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். கடையநல்லூரில் பா.ஜ. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நேற்று நடந்தது. அப்போது அண்ணாமலை பேசியதாவது: ஒவ்வொரு இந்தியனின் தலையின் மீது லட்சக்கணக்கில் கடன் சுமை உள்ளது. அதை குறைப்பது பற்றி பேசாமல் மற்றவற்றை பற்றியே அரசியல்வாதிகள் பேசுகின்றனர். இந்தியாவில் ஐந்து வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என எத்தனை தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலை காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர் முதல் அங்கன்வாடி ஊழியர் வரை தேர்தலுக்காக ஆறு மாதம் பணி செய்ய வேண்டியது உள்ளது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஓட்டு போட்டு கை ரேகை தேய்ந்து போனது தான் மிச்சம். இதனை கருத்தில் கொண்டு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கொண்டுவர இருக்கிறோம். ஐந்து வருடங்களுக்கு ஒரே தேர்தல் மூலம் அவர்கள் அனைவரும் உங்களுக்கு சேவகராக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு இந்தியன் தலையிலும் லட்சக்கணக்கில் கடன் இருக்கிறது என்று அண்ணாமலை பேசியது மறைமுகமாக மோடி அரசையே தாக்குவதுபோல் உள்ளது என்று பாஜ கட்சியினரே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.