புதுடெல்லி: இந்திய விண்வௌி வீரர் சுபன்ஷூ சுக்லா வரும் 8ம் தேதி சர்வதேச விண்வௌி மையத்துக்கு செல்ல உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சுபன்ஷூ சுக்லா. இந்திய விமானப்படை விமானியான சுக்லா, இஸ்ரோவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக கடந்த 2019ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வௌி மையத்தில் பயிற்சி பெற்றார்.
இந்நிலையில் அமெரிக்க விண்வௌி ஆய்வு மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 வீரர்களை சர்வதேச விண்வௌி நிலையத்துக்கு அனுப்ப உள்ளது. இதில் இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளை சேர்ந்த விண்வௌி வீரர்களும் செல்ல உள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 8ம் தேதி சுக்லா உள்ளிட்ட விண்வௌி வீரர்களுடன் அமெரிக்காவின் நாசா விண்வௌி தளத்தில் இருந்து டிராகன் விண்கலம் தன் பயணத்தை தொடங்க உள்ளது.