சென்னை: இந்தியர்களை அவமதிக்கும் அமெரிக்காவிடம் அடங்கிப் போவது என்ன மாதிரியான தேசபக்தி? என விசிக-வின் துணைத் தலைவர் வன்னிஅரசு கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டாவது கட்டமாக அமெரிக்காவில் இருந்து 119 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் விமானம் மூலம் சங்கிலியில் கட்டப்பட்டு, போர் விமானத்தில் இவர்கள் நாடு கடத்தப்பட்டனர். சரியாக மோடி அமெரிக்காவில் இருந்த அதே நேரத்தில் ட்ரம்ப் இந்தியர்களை நாடு கடத்தி உள்ளது என்பதுதான் இதில் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக வன்னிஅரசு தனது எக்ஸ் தளத்தில் கூறிய கண்டன செய்தியில்; இந்தியர்களை சட்ட விரோத குடியேறிகளாக அறிவித்து கை விலங்கிட்டு அவமானப்படுத்திய அமெரிக்கா மீதோ அதிபர் ட்ரம்ப் மீதோ பாஜகவினருக்கு எந்த கோபமும் வரவில்லை. மாறாக, அப்படி செய்த அதிபர் ட்ரம்ப் அவர்களை ஆரத்தழுவுகிறார் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் மோடி. ஒரு கண்டனம் கூட இல்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களோ, இன்னும் ஒரு படி மேலே போய், இதுவெல்லாம் சகஜம் தான் என நாடாளுமன்றத்திலேயே சப்பைக்கட்டு கட்டுகிறார். ஆனால் விகடன் போன்ற ஊடகங்களை அச்சுறுத்துகிறது பாஜக கும்பல். பாஜக பேசுவதெல்லாம் தேச பக்தி.
ஆனால், இந்திய தேசத்தை இந்தியர்களை அவமதிக்கும் அமெரிக்காவிடம் அடங்கி போவது என்ன மாதிரியான தேசபக்தி? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.