புதுடெல்லி: எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் மும்பையில் ஆக.15ல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளன. இதுதொடர்பாக பீகார் தலைநகர் பாட்னா மற்றும் பெங்களூருவில் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டது. பெங்களூருவில் நடந்த 26 கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டது.
3வது கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ஆக.15ம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடர்பான அனைத்து விவரங்களையும் இறுதி செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு, தேர்தலை சந்திக்க தேவையான ஏற்பாடுகள், பிரசார நடைமுறைகள் குறித்தும், டெல்லியில் புதிய அலுவலகம் திறப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.