இம்பால்: ‘இந்தியா’ கூட்டணியின் 21 எம்பிக்கள் குழுவின் ஆய்வு நிறைவுற்ற நிலையில், கூட்டு அறிக்கையை மணிப்பூர் ஆளுநரிடம் எம்பிக்கள் சமர்பித்தனர். அதில், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி உள்ளனர். நாளை நாடாளுமன்றம் கூடும் என்பதால், அப்போது இவ்விவகாரம் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினரிடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடந்த கலவரத்தில் 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதற்கிடையே குகி பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை கண்டிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின்
இரு அவைகளிலும் எதிர்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை, பெண்கள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வருகின்றன.
ஆனால் பிரதமர் மோடி தரப்பில், இதுவரை மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் பேசப்படவில்லை. அதனால் பிரதமரை பேசவைக்கும் பொருட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மக்களவையில் நம்பிக்கயைில்லா தீர்மானம் தொடர்பாக விவாதம் நடத்த எழுப்பப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். ஆனால் எப்போது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கவில்லை.
இந்நிலையில் மணிப்பூர் மாநில நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் அடங்கிய எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி குழு டெல்லியில் இருந்து நேற்று மணிப்பூர் சென்றது.
இந்த குழுவில் காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, கவுரவ் கோகாய், கே.சுரேஷ், புலோ தேவி நேதம், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராஜிவ் ரஞ்சன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரஹிம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மனோஜ் குமார், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஜாவேத் அலி கான், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த மகுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல் ஆம் ஆத்மியைச் சேர்ந்த சுஷில் குப்தா, சிவசேனா உத்தவ் அணியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் 2 குழுக்களாக பிரிந்து மணிப்பூரின் சூரசந்த்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேற்று பார்வையிட்டனர். முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து அங்குள்ள நிலவரத்தை கேட்டறிகின்றனர். மணிப்பூரின் தொலைதூர பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் செல்ல எதிர்க்கட்சி எம்பிக்கள் அனுமதி கேட்டுள்ளனர். இந்த நிலையில் இம்பால் ஓட்டலில் தங்கியிருந்த 21 எம்பிக்களும், இன்று காலை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தினர். முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் கூறுகையில், ‘மணிப்பூரின் நிலைமை சரியில்லை. ஆளுநரிடம் எம்பிக்கள் குழு, கூட்டு அறிக்கையை சமர்பிக்க உள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூரின் நிலைமை குறித்து பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொள்வோம்’ என்றார்.
அதேபோல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா கூறுகையில், ‘மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்’ என்றார். தொடர்ந்து ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்த 21 எம்பிக்கள் குழுவினர், தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் தயாரிக்கப்பட்ட கூட்டறிக்கையும் சமர்பித்தனர். மணிப்பூர் ஆய்வை முடித்துக் கொண்டு, இன்று டெல்லி திரும்பும் 21 எம்பிக்கள், நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கின்றனர். அப்போது ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களிடம் தங்களது பயணம் குறித்த விபரங்களை தெரிவிக்க உள்ளனர். அவர்களது அறிக்கையின் அடிப்படையில் நாளை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.