புதுடெல்லி: இந்தியா தலைமையிலான ஜி 20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு வரும் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்துக்கான நாடாளுமன்றங்கள்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், இந்தியா தலைமையிலான ஜி 20 நாடுகளின் சபாநாயகர்கள் உச்சி மாநாடு, துவாரகாவில் யசோபூமியில் உள்ள சர்வதேச அரங்கில் வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் சபாநாயகர்கள் உச்சி மாநாட்டில், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 14 பொது செயலாளர்கள், 26 துணை ஜனாதிபதிகள் உள்பட 350க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஓம் பிர்லா தெரிவித்தார். உச்சி மாநாட்டின் 2ம் நாளான 13ம் தேதி நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதில் பங்கேற்க இருப்பதாகவும் சபாநாயகர் பிர்லா குறிப்பிட்டார்.