நாகர்கோவில்: குமரி மாவட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா திருவிதாங்கோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாசிச சக்திகள், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது, அதற்கான போரை காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் முன்னெடுத்துள்ளார்கள். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக இடங்கள் கேட்பது என்பது எல்லோருக்கும் உள்ள அவா. கட்சியின் தலைமை அதனை முடிவு செய்யும். என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படுவோம்.
தமிழ்நாடு முதல்வர் கூட்டணி கட்சி தலைவர், திமுக தலைவர்தான் கூட்டணியின் தலைவராக இருப்பார். ராமதாஸ் 80 வயது கடந்த மிகப்பெரிய ஆளுமை, 40 ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் உள்ளேன், அவரது உறவு நீண்டகால உறவு. நான் அரசியலுக்காக அவரிடம் செல்லவில்லை. அவரை சந்தித்தது தவறு என்று கூறுவது பெரிய வன்மம். இது என்ன ஜனநாயகம்? .ராமதாசை சந்தித்ததில் கூட்டணியும் இல்லை, அரசியலும் இல்லை. கூட்டணியில் கலகம் ஏற்படுத்தலாமா, பிரச்னை ஏற்படுத்தலாமா என்று பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணி எக்கு கோட்டை, இதில் ஒரு செங்கல்லை கூட பிடுங்க முடியாது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும். நடிகர் விஜய் பாசிச, மதவாத சக்திகளிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.