புதுடெல்லி: மும்பையில் வரும் 31 மற்றும் செப்.1ம் தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில், காங்கிரஸ்,திமுக,திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் முதல் ஆலோசனை கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தது. 3வது கூட்டம் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய 2 நாட்கள் மும்பையில் நடைபெறுகிறது.
இதில், கட்சிகள் இடையே நேரடி போட்டி சம்மந்தமான பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் ஆராயப்படும். இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சட்டீஸ்கரில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மாநிலத்தில் ஆளும் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதனால் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கெஜ்ரிவாலிடம் நேற்று நிருபர்கள் கேட்ட போது,‘‘மும்பை கூட்டத்தில் கலந்து கொள்வேன். முடிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன்’’ என்றார்.