சென்னை: I.N.D.I.A. கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். 2024 மக்களவை தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து, கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
தொகுதி பங்கீடு, ஒருங்கிணைப்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மக்களவை தேர்தல் வியூகம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பல குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. இந்நிலையில், I.N.D.I.A. கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், டி.ஆர்.பாலுவும் மும்பை புறப்பட்டார். I.N.D.I.A. கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் குறித்து வலியுறுத்தி பேசுவார் என தெரிகிறது. இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றபின் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் முதல்வர் பங்கேற்பார். இந்தியா கூட்டணியின் நாளைய கூட்டம் முடிந்தவுடன் நாளை இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். அரசியல் பார்வையாளர்கள் இந்தியா கூட்டணி கூட்டத்தை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.