டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கைகளில் பதாகையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் உயிர் காப்பீட்டு திட்டங்கள் மீது 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உயிர்காக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி., வரியை விதித்துள்ள மத்திய பாஜக அரசுக்கு, எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், திமுக மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காப்பீட்டு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.