சென்னை: அகில இந்திய கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு காலம் முடிந்துள்ளது. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலமைச்சர் என்னை அழைத்து தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன சென்று சேராமல் இருக்கிறதோ அவற்றை செய்ய அறிவுறுத்தினார்.
அப்போது 1.3 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டிய நிலுவை இருந்தது, உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகை உட்பட பல திட்டங்கள் 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 53 ஆயிரம் அடுத்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. நலத் திட்டங்கள் கொடுத்து கொண்டே இருக்கிறோம். இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல், தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் நேற்று வரை 44,74,682 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள்.
இதற்காக 27 திட்டங்களை புதிதாக முதலமைச்சர் அறிமுகப்படுத்தி உள்ளார். 23,70,288 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று தொழிலாளர்களுக்கு பண உதவியை உயர்த்திக் கொடுக்க முயற்சி செய்வேன். பென்ஷன் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 42% பெண்கள் பணிக்கு செல்கின்றனர்.
பணிக்கு செல்லும் தாய்மார்கள் குழந்தைக்கு உணவு தயார் செய்துவிட்டு செல்ல வேண்டும். ஆனால் தற்போது காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த தாய்மார்கள் சிரமமின்றி பணிக்கு செல்கின்றனர். இதேபோன்று முதலமைச்சர் கொண்டு வந்த பல்வேறு திட்டத்தால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் 1000 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ரூ.1 லட்சம் மானியத்தில் வழங்க இருக்கிறோம். அதுமட்டுமின்றி 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்ட முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அந்த 10 ஆயிரம் வீடுகளை வாங்கி கட்டுவதற்கு ஆளில்லை. இவ்வாறு அவர் கூறினார்.