புதுடெல்லி: இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டவர்களின் வேலைவாய்ப்பின்மை 42 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழிலாளர்களின் நிலை குறித்த ஆய்வறிக்கை ஒன்றை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது. அதில், இந்தியாவில் இருக்கும் தொழிலாளர்களின் நிலை பல்வேறு அம்சங்களில் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 25 வயதுக்குட்டவர்களின் வேலை வாய்ப்பின்மை 15 சதவீதம் அதிகரித்து உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘இந்தியாவின் வேலை நிலை – 2023’ என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு வேலைவாய்ப்புகள் நல்ல நிலையில்தான் உள்ளது. கொரோனாவிற்கு முந்தைய வேலை வாய்ப்பின்மையை விட தற்போது குறைவாகதான் உள்ளது. ஆனால் 25 வயதுக்குட்பட்டவர்களின் வேலை வாய்ப்பின்மை 15 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1980ம் ஆண்டுகளில் ஊதியம் பெறும் தொழிலாளர்களின் நிலை பின் தங்கிய நிலையில் இருந்து வந்தது. அதன்பிறகு வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2004ம் ஆண்டில் ஊதியம் பெறும் ஆண் தொழிலாளர்கள் 18 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்தனர்.
அதேபோல் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 லிருந்து 25 சதவீதமாக உயர்ந்தது. கொரோனா பரவலால் இந்த வளர்ச்சி 2019ம் ஆண்டு முதல் குறைந்துள்ளது. பாலின அடிப்படையிலான வருவாய் வேறுபாடு விகிதம் குறைந்துள்ளது. 2004ம் ஆண்டில் ஆண்களின் ஊதியத்தில் 70 சதவீதத்தை பெண்கள் பெற்றனர். அதுவே 2017ம் ஆண்டில் 76 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது வரை இந்தநிலை மாறவில்லை. அதேபோல் அனைத்து நிறுவனங்களிலும் எஸ்.சி, எஸ்.டி தொழிலாளர்கள் குறைவாக உள்ளனர். அதில் உயர் வகுப்பை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவு வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.