சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பேரமைப்பு சார்பில் நிருபர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, பேரமைப்பின் தலைவர் பிரபு நிருபர்களிடம் கூறியதாவது: சர்வதேச தொழிளாளர்கள் அமைப்பின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி 15வயது முதல் 34 வயது வரை உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் 23.22 சதவீதம் உள்ளது. 35 வயதுக்கு மேல் வேலைவாய்ப்பின்மை கேள்விக்குறியாக உள்ளது. உலக நாடுகளின் வேலைவாய்ப்பின்மை குறித்த விவரத்தில் இந்தியா முதலிடம் உள்ளது. இதே நிலை நீடித்தால் இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆகும்.
வேலைவாய்ப்பின்மையால் சட்டம் -ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களுக்கு அடிமை ஆவதற்கும் குழத்தைகள் தவறான பாதையை தேர்ந்தெடுக்கவும் நாம் வழிவகுக்கிறோம். இன்று நாம் செயல்படாவிட்டால் நமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கடந்த 2020ம் ஆண்டு வேலையின்மையின் காரணமாக நாடு முழுவதும் 3548 பேர் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய அரசு புள்ளிவிவரம் கொடுத்துள்ளது. வேலைக்கான மனிதர்கள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் நம் மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. படித்த இளைஞர்கள் வேலை இல்லாததற்கு இதுவே காரணம்.
இந்தியாவில் 100 சதவீதம் வேலைவாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் அனைத்து கல்லூரி நிறுவனர்கள், அனைத்து கட்சிகள், மத, இன, மொழி தலைவர்கள், அனைத்து சங்கங்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவின் வேலைவாய்யின்மைக்கு விரைவில் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். நமது சந்ததியின் வளர்ச்சி நமது குடும்பத்தின் வளர்ச்சி, நமது குடும்பத்தின் வளர்ச்சி நமது தேசத்தின் வளர்ச்சி, தேசத்தின் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் விரைவில் இந்திய தேசத்தின் இந்த நிலைமை மாறும். மிக பெரிய பொருளாதார ஜிடிபி 30% முதல் 70% வரை உயரும். இவ்வாறு அவர் கூறினார்.