புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டி வல்லரசாக வேண்டுமென்றால், பணியிடங்களில் கூடுதலாக 40 கோடி பெண்களை சேர்க்க வேண்டியது அவசியம் என ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் காலமுறை தொழிலாளர் ஆய்வு (பிஎப்எல்எஸ்) புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு லாபநோக்கமற்ற தி நட்ஜ் நிறுவனம் புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், 2047ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதை இலக்காக கொண்டுள்ள இந்தியா, அதை அடைய பெண் தொழிலாளர்கள் பங்கேற்பில் கணிசமான அதிகரிப்பு தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்திற்கு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களிக்க, கூடுதலாக 40 கோடி பெண் பணியாளர்கள் தேவை. இதற்காக, தற்போதைய பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை 37 சதவீதத்தில் இருந்து 2047க்குள் 70 சதவீதமாக, கிட்டத்தட்ட இரட்டிப்பாக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், 2047க்குள் 11 கோடி பெண்கள் மட்டுமே புதிய பணியாளர்களாக பணிச்சூழலில் சேருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது இலக்கை அடைய கூடுதலாக 14.5 கோடி பெண்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது. வேலை இழப்பில் ஆண்களை விட பெண்கள் 7 மடங்கு அதிகமாகவும், வேலை இழப்புக்குப் பின் மீண்டும் பணியில் சேர முடியாமல் இருப்பதில் பெண்கள் 11 மடங்கு அதிகமாகவும் இருக்கின்றனர்.
2020ம் ஆண்டில் கொரோனா பாதிப்புக்குப் பிறகு, 2019ல் பணியில் இருந்த பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சவால்களை எதிர்கொள்ள, 3 முக்கிய வழிகளை அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. முதலாவதாக வேலைவாய்ப்பு தளங்கள் மற்றும் டிஜிட்டல் மைக்ரோவொர்க் மூலம் வேலைகளை மறுவரை செய்து வேலைவாய்ப்பிழப்புகளை சரி செய்ய வேண்டும். இரண்டாவதாக, டிஜிட்டல் வர்த்தக உள்கட்டமைப்பு மூலம் தொழில் முனைவோர் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக, போக்குவரத்து, டிஜிட்டல் அணுகல் போன்றவற்றில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும். இது குறித்து தி நட்ஜ் பிரைஸ் இயக்குநரும் தலைவருமான கனிஷ்கா சட்டர்ஜி கூறுகையில், ‘‘இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றிய கனவானது பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்காமல் நனவாக முடியாது. இதற்கு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தடைகளை கடக்க உடனடியான, நீடித்த நடவடிக்கைகள் அவசியம்’’ என்றார்.