ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் டி20 காலிறுதியில் இந்தியா – நேபாளம் இன்று மோதுகின்றன. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஏ, பி, சி பிரிவுகளில் இருந்து முதல் இடம் பிடித்த நேபாளம், ஹாங்காங், மலேசியா அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறுதியில் களமிறங்குகின்றன.
முதல் காலிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி இன்று காலை நேபாள அணியை எதிர்கொள்கிறது. ரோகித் பவுடெல் தலைமையிலான நேபாளம், இத்தொடரில், சர்வதேச டி20ல் 300+ ரன் குவித்த முதல் அணி, அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற அணி, குறைந்த பந்துகளில் அரைசதம், சதம் விளாசிய அணி என பல வரலாற்று சாதனைகளை நேபாளம் படைத்துள்ளது. எனினும், பலம் வாய்ந்த இந்திய அணியை சமாளிப்பது நேபாளத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். இன்று நடைபெறும் 2வது காலிறுதியில் பாகிஸ்தான் – ஹாங்காங் பலப்பரீட்சை நடத்த உள்ளன.