மதுரை: இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் வானிலை ஆய்வு கணிப்புகளை தனியார் வானிலை ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாத வகையில் முடக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு தனியார் வானிலை ஆய்வாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் நாடு முழுமைக்கும் மட்டுமின்றி இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வானிலை தரவுகள், கணிப்புகள், முன்னறிவிப்புகள் வழங்கி வருகிறது.
இம்மையம் தொழில்நுட்ப வளர்ச்சிகேற்ப தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வானிலை நிலையம் மற்றும் மழைமானிகள் வாயிலாக வெப்பநிலை அளவு, காற்றின் அழுத்தம், ஈரப்பதம், காற்று வீசும் திசை காற்றின் வேகம் மழை அளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உடனே அறிந்து கொள்ள முடிந்தது. இந்த வானிலை தரவுகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுத் துறைகள் வானிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில், வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது இந்த தரவுகளை பார்க்க முடியாத அளவுக்கு, இணையதளத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தவிர வேறு யாரும் வானிலை தகவல்களை பார்க்க முடியவில்லை. இதுகுறித்து, தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா கூறுகையில், ‘‘தானியங்கி வானிலை நிலையங்களின் வாயிலாக பதிவாகும் மழை அளவு, காற்றின் வேகம் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் மாநில அரசு அதிகாரிகளுக்கும் தேவைப்படும். இப்போது இது முடக்கப்பட்டதன் காரணமாக வானிலை ஆய்வாளர்களும், மாநில துறை சார்ந்த அதிகாரிகளும் இணையதளத்தை பார்வையிட முடியவில்லை. இணையதளத்தை முடக்கினாலும் சென்னை, மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து தானியங்கி வானிலை நிலையங்களிலும் பதிவாகும் அன்றைய மழை அளவு மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட தரவுகளை கூட தினசரி அறிக்கையில் வெளியிடாமல் இந்திய வானிலை ஆய்வு மையம் நிறுத்தியுள்ளது’’ என்றார்.