சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி அக்டோபர் 16ம் தேதியுடன் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஆந்திரா, தெலங்கானா, மற்றும் ஒரு சில தென்கிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதில் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையு பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக பெரியகுளம் பகுதியில் 140 மிமீ மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக தென் மாவட்டங்களில் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் ஓரளவுக்கு மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.