சென்னை : தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னையில் பேட்டி அளித்த மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவில் வீரியமிக்க கொரோனா பரவல் எங்கும் இல்லை. முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. ஒன்றிய அரசு கூறிய அறிவுறுத்தல்களையே நாங்களும் கூறி வருகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை”இவ்வாறு தெரிவித்தார்.
இதே போல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பரவல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன; தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.” இவ்வாறு கூறினார். நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இதுவரை 4.302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.