சென்னை: அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்காமல் இரண்டு இடத்திற்கும் அதிமுகவே வேட்பாளர்களை அறிவித்தது. மேலும், தேமுதிகவுடன் கூட்டணி தொடரும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா, ‘வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும’’ என்றார். இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்தியா கூட்டணிக்கு தேமுதிகவை அழைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘மதுரை திமுக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதற்கு பிரேமலதா நன்றி தெரிவித்தார். தேமுதிகவை கூட்டணிக்கு வரவேற்பீர்களாக என்று கேட்கிறீர்கள். இந்தியா கூட்டணிக்குள் யாரை வரவேற்க வேண்டும் என்பதை, கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார். அவ்வாறு எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த முடிவெடுத்தாலும் வரவேற்போம். இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று தேமுதிகவிற்கு நான் அழைப்பு விடுக்கவில்லை’’ என்றார்.