புதுடெல்லி: “இந்தியாவில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடக்க போகிறது” என ஹிண்டன்பர்க் நிறுவனம் வௌியிட்டுள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கி வரும் நிதி ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க். இது பெருநிறுவனங்களில் நடக்கும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது, கடந்த ஆண்டு இந்நிறுவனம் அதானி பங்குச்சந்தை முறைகேடுகள் பற்றி வௌியிட்ட பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.
இந்நிலையில் ஹிண்டன்பர்க் தன் எக்ஸ் தள பதிவில் ஒரு எச்சரிக்கை வௌியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் விரைவில் மிகப்பெரிய சம்பவம் நடக்க போகிறது” என தெரிவித்துள்ளது. இந்த மறைமுக எச்சரிக்கை தற்போது பல்வேறு சந்தேககங்களுடன் பேசு பொருளாகி உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பில் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.1000மாக சரிந்தது. மேலும் ரூ.10 லட்சம் கோடி வரை பங்கு சந்தையில் அதானி குழுமம் இழப்பை சந்தித்தது. தற்போது தான் அதானி குழுமம் மீண்டு வருகிறது. அதன் பங்கு விலை ரூ.3,187ஆக உள்ளது. அதே போல் இந்திய பங்குச்சந்தையும் தற்போது தான் சரிவில் இருந்து மீண்டுள்ளது.