புதுடெல்லி: இந்தியா வளர்ச்சிப் பாதையைத் தொடர போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐஎம்எப் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் துணை நிர்வாக இயக்குனர் (ஐஎம்எப்) கீதா கோபிநாத் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். பின்னர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில்,’ உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க விரும்பினால் இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும்.
உலக வர்த்தகத்திற்கு இந்தியா திறந்த நிலையில் இருப்பது முக்கியம். இந்தியாவில் கட்டண விகிதங்கள் மற்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளன. எனவே உலக அரங்கில் ஒரு முக்கிய நாடாக இருக்க விரும்பினால், அந்த கட்டணங்களைக் குறைக்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இந்தியா அதன் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் நன்றாக வளர்ந்துள்ளது. அந்த வளர்ச்சி தொடர்ந்தால் தான் இந்தியாவில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும். வரி அமைப்பில் போதுமான முன்னேற்றம் இருப்பது மிகவும் முக்கியம். இல்லை என்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த செலவினங்களும் உயர்ந்துவிடும்’ என்று கூறினார்.