இந்தூர்: எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்பதை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.ஆதார் முதல் யுபிஐ வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்நிலையில் மபி மாநிலம் இந்தூரில் ஒவ்வொரு வீடுகளுக்கும் டிஜிட்டல் முகவரி திட்டத்தை இந்தூர் மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி நகரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே தனித்துவமான க்யூஆர் குறியீடுகளுடன் கூடிய டிஜிட்டல் தகடுகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் சுதாமா நகரில் இது தொடங்கப்பட்டுள்ளது.
குடிமக்கள் சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் ஸ்மார்ட் நிர்வாகத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தூர் மாநகராட்சி மேயர் புஷ்யமித்ரா பார்கவா‘‘டிஜிட்டல் முகவரி திட்டத்தை ஒன்றிய அரசின் டிஜிபின் (டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்) அமைப்புடன் இணைத்துள்ளோம். நாட்டிலேயே இது போன்ற டிஜிட்டல் முகவரி வழங்கப்படும் முதல் நகரம் இந்தூர்.இந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், ஜிபிஎஸ் உதவியுடன் டிஜிட்டல் முகவரியை அறிய முடியும்’’ என்றார்.