திருவனந்தபுரம்: ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த இந்தியாவிலேயே மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கேரள மாநிலம் கொச்சியில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே போதைப் பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து எம்டிஎம்ஏ, கொக்கைன் உள்பட போதைப் பொருட்கள் கேரளாவுக்கு பெருமளவு கடத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தடுப்பதற்காக தேசிய போதைப் பொருள் தடுப்புத்துறை, போலீசார், கலால் துறையினர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை. விமானம், கப்பல், ரயில், சாலை மார்க்கமாக தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் ஒரு தபால் அலுவலகத்திற்கு வந்த பார்சலில் போதைப் பொருள் இருப்பதாக தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகள் தபால் அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பார்சல்களில் பெருமளவு எல்எஸ்டி போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் போதைப் பொருள் பார்சல்களை அனுப்பியது எர்ணாகுளம் அருகே உள்ள மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த எடிசன் என்பது தெரியவந்தது. உடனே தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எல்எஸ்டி, கெட்டாமின் உள்பட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து எடிசனை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன்படி எடிசன் கெட்டாமெலோன் என்ற வலை அமைப்பை உருவாக்கி கடந்த பல வருடங்களாக இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை உள்பட இந்தியாவில் அனைத்து முக்கிய நகரங்களிலும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கும்பல் தலைவனான எடிசனை கைது செய்ததன் மூலம் இந்தியாவில் மிகப் பெரிய போதைப் பொருள் வலை முறிக்கப்பட்டு உள்ளதாக கொச்சி தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.