சென்னைக்கு வயது 385. கேட்கவே பிரம்மிப்பாக இருக்கிறது அல்லவா? அவ்வளவு பழமையான நகரம் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் தலைநகராக இருக்கிறது. தென்னிந்தியாவில் கால் பதிக்க ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி நிலம் தேடியபோது, தேர்ந்தெடுத்த இடம் தான் இன்றைய சென்னை. 1639ல் பழவேற்காடு முதல் மயிலாப்பூர் சாந்தோம் வரை ஆண்ட உள்ளூர் மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக் மற்றும் அவரின் சகோதரர் ஐயப்ப நாயக்கர் ஆகியவர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி ஆலை அமைக்கவும், கிட்டங்கி அமைக்கவும் ஒரு நிலம் வாங்கியது.
அந்த நிலம் வங்க கடலோரம் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதியாக இருந்தது. நிலத்தை டமர்லா வெங்கடபதி நாயக்கிடம் இருந்து பிரிட்டிஷார் வாங்கிய நாள் 1639 ஆகஸ்ட் 22. அன்றுதான் இன்றைய சென்னைக்கு வித்திட்ட நாள். இந்த நாள் தான் சென்னை தினம். உலகிலேயே 2வது நீளமான கடற்கரை, இந்தியாவின் பெருநகரங்களுள் ஒன்று என்று சென்னைக்கு பல பெருமைகள். அதில் முக்கியமான இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவதுதான். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள டெட்ராய்ட் நகரம் உலகின் ஆட்டோமொபைல் தொழிலின் தலைநகரம். அந்த அளவுக்கு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது.
அங்கு 1896ல் முதல் கார் தயாரிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் சென்னையிலும் கார் தயாரிப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடந்தது என்ற வரலாறு பலரும் அறியாதது. சென்னையில முதலில் கார் தயாரிக்கப்பட்டது 1903ல். அதுதான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார். இந்த காரை தயாரித்தது, ஆங்கிலேயர் நடத்தி வந்த சிம்சன்ஸ் நிறுவனம். இன்றைக்கும் சென்னை அண்ணா சாலையில், பன்னோக்கு மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயர் சிம்சன்ஸ்தான். அந்த பகுதியில் தான் சிம்சன்ஸ் நிறுவனம் இன்றும் இயங்கி வருகிறது.
ஸ்காட்லாந்துகாரரான ஏ.எம்.சிம்சன் 1840ல் சென்னைக்கு வந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில்(தற்போதைய பெரியார் ஈ,வே.ரா நெடுஞ்சாலை) சிறிய பட்டறை ஒன்றை அமைத்தார். குதிரை வண்டிகள், குதிரைக்கான கடிவாளம், பூட்ஸ் தயாரித்து வந்தார். சில ஆண்டுகளில் அங்கிருந்து மவுண்ட் ரோடுக்கு (தற்போதைய அண்ணா சாலை) ஜாகை மாறியது சிம்சன்ஸ் நிறுவனம். அங்கு பெரிய ஆலையை அமைத்து தனது தொழிலை தொடர்ந்தார் சிம்சன்.
இந்தியா முழுவதும் ஏன் உலகின் பல்வேறு நாடுகளில் சிம்சன்ஸ் கூண்டு குதிரை வண்டிக்கு மவுசு அதிகரித்தது. பணமும் கொட்டத் துவங்கியது. விதவிதமான குதிரை வண்டிகள், பல்லக்குகள், யானை மீது பொருத்தப்படும் அம்பாரி என்று தொழில் விரிவடைந்தது. இந்த கால கட்டத்தில் இரும்பு குதிரை…. அதாங்க ரயில்வே கண்டுபிடிக்கப்பட்டது. ரயிலில் வேகமாக செல்லலாம் என்பதால் குதிரை வண்டிகளுக்கு மவுசு கொஞ்சம் குறையத் துவங்கியது. உடனே ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிலில் இறங்கினார் சிம்சன்.
1856ல் சென்னையின் முதல் ரயில்வே பாதை பயன்பாட்டுக்கு வந்தது. சென்னை வியாசர்பாடியில் இருந்து வாலாஜா வரை 63 மைல் தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டு ரயில் இயக்கப்பட்டது. 2 முதல் வகுப்பு பெட்டி, 8 மற்ற பெட்டிகள் கொண்ட சென்னையின் முதல் ரயிலை தயாரித்ததும் சிம்சன் நிறுவனம் தான். அதேநேரத்தில், குதிரை வண்டி தயாரிப்பையும் அவர்கள் கைவிடவில்லை. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கூட குதிரை வண்டிகளை ஏற்றுமதி செய்தனர்.
1877ல் மவுண்ட் ரோட்டில் நம்பர் 201ல் உள்ள சொத்தை வாங்கி அங்கே ஆலை நிறுவப்பட்டது. ராஜபுத்ர மன்னர்கள் முதல் தென்னிந்திய குறுநில மன்னர்கள் மட்டுமல்லாது, இந்தியா வந்த வேல்ஸ் இளவரசருக்கு தனியாக சொகுசு வசதிகளுடன் கூடிய குதிரை வண்டியை சிம்சன் தயாரித்து இங்கிலாந்து மன்னர் குடும்பத்தோடு நெருங்கினார். 1900களின் துவக்கத்தில் சென்னை நகரத்தில் கார்கள் ஓடத் துவங்கின. 1901ல் கார் ஷோரூம் ஒன்றை துவங்கினார் சிம்சன்.
அதே நேரத்தில் சிம்சன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சாமுவேல் ஜான் கிரீன், மோட்டார் கார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். 1903ல் நீராவியால் இயங்கும் கார் ஒன்றை சாமுவேல் ஜான் கிரீன் தயாரித்துவிட்டார். அந்த கார்தான் இந்தியாவில் முதல்முதலாக தயாரிக்கப்பட்ட கார் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிம்சன் முதல் நீராவி பஸ்ஸை உருவாக்கினார். இது பெஸ்வாடா (விஜயவாடா) மற்றும் மசூலிபாதம் (மச்சிலிப்பட்டணம்) இடையே ஓடியது.
இது நாட்டின் முதல் மோட்டார் பேருந்து சேவை என்று கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த நிறுவனம் இன்று வரை டீசல் இன்ஜின் தயாரிப்பு உள்ளிட்ட ஆட்டோமொபைல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளது. 121 ஆண்டுக்கு முன் சாமுவேல் ஜான் கிரீன் போட்ட வித்து செழித்து வளர்ந்து இன்றைக்கு சென்னையை ஆசியாவின் டெட்ராய்ட்ராக மாற்ற உதவியுள்ளது.
சென்னையில் ஓடிய முதல் கார் MC1
1894ல் கார் ஒன்று சென்னை சாலைகளில் ஓடியதாக வரலாற்று பதிவு உள்ளது. ஆனால், அரசு ஆவணப்படி சென்னையில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட முதல் கார் பாரி மற்றும் கோ நிறுவனத்தின் இயக்குநரான ஏ.ஜே. யார்க் என்பவருக்குச் சொந்தமானது. 1901ல் பதிவான அந்த இறக்குமதி செய்யப்பட்ட காரின் பதிவு எண் MC1. அடையாறில் உள்ள தனது பங்களாவில் இருந்து ‘பிளாக் டவுனில்’ உள்ள பாரி நிறுவனத்துக்கு யார்க் தினமும் ஓட்டிச் சென்றார். தென்னிந்தியாவில் முதல் பதிவு செய்யப்பட்டது முதல் கார் இது தான். சென்னையில் கார் வாங்கிய முதல் இந்தியர் கட்டிட ஒப்பந்ததாரர் டி நம்பெருமாள் செட்டி. அவரது கார் பதிவு எண் MC3.