அக்ரா: இந்தியாவில் ஜனநாயகம் என்பது கட்டமைப்பு அல்ல கலாசாரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கான 8 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இதில் கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அவர் செல்ல உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று காலை விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, பயணத்தின் முதல்கட்டமாக கானா நாட்டிற்கு சென்றடைந்தார். அப்போது கானா பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
தங்கத்தின் நிலம் என கானா அறியப்படுகிறது. இது மண்ணுக்கு அடியில் இருப்பதை வைத்து சொல்லப்படவில்லை. உங்கள் மனதில் உள்ள அரவணைப்பு மற்றும் வலிமைக்காகவும் கூறப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம். ஆப்பிரிக்கா கண்டத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது கானா. இந்த பெருமை மிக்க அவையில் பேசுவதை நினைத்து பெருமைப்படுகின்றேன். இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் மாநிலங்களை ஆளுகின்றன.
கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பை அளித்ததற்காக 140 கோடி இந்தியர்களுக்கும் நன்றி. இந்தியாவில் ஜனநாயகம் என்பது கட்டமைப்பு அல்ல கலாசாரம். உலகின் வளர்ச்சிக்கு உந்து விசையாக இருக்கும் இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் கூறினார்.