ஆம்ஸ்டெல்வீன்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் இன்று, அர்ஜென்டினா அணிக்கு எதிராக இந்தியா மோதுகிறது. புரோ ஹாக்கி லீக் ஐரோப்பிய சுற்றுப் போட்டிகள் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்று வரும் இந்திய அணி, நெதர்லாந்து அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. அதைத் தொடர்ந்து நெதர்லாந்துடனான 2வது போட்டி நேற்று முன்தினம் நடந்தது. விறுவிறுப்பாக நடந்த முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. 2வது பாதி ஆட்டத்தில், நெதர்லாந்து அணி வீரர்கள் 2 கோல்கள் போட்டனர்.
இந்தியா ஒரு கோல் மட்டுமே போட்டது. அதனால், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து, இன்று நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் இந்திய அணி மோதுகிறது. அர்ஜென்டினா அணியுடன் இதுவரை இந்தியா ஆடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக நடந்த ஹாக்கி போட்டி டிரா ஆனது. 2023-24 ஹாக்கி புரோ லீக் போட்டிகளில், இந்தியா இதுவரை, அர்ஜென்டினா அணியுடன் 2 முறை மோதி, இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.