சென்னை: சென்னை திரு.வி.க நகர் மண்டலம், 74வது வார்டுக்கு உட்பட்ட புதிய வாழைமா நகரில் 2022-23ம் ஆண்டு மாநகராட்சி மேயர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.93.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கத்தையும், புதிய ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடத்தையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வருவாயில் தரவேண்டிய நிதிப்பகிர்வை அளிக்காத போதிலும், வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காத நிலையிலும், வளர்ச்சிப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் புதிது புதிதான திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழிகள் இவைகள் அனைத்தையும் நிறைவேற்றி ஒட்டுமொத்த இந்தியாவில் வலிமை மிக்க 10 தலைவர்களில் ஒருவராக நம்முடைய முதல்வர் திகழ்வது இப்படிப்பட்ட அருட்பணிகளுக்கு கிடைத்த நற்சான்றாக கருதுகிறோம்.
நிதியின்மை என்பது ஒருபுறம் இருந்தாலும், முதல்வர் பொறுப்பேற்ற பிறகு விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கீடு செய்து மக்களின் வாழ்க்கையில் இன்பத்தை உண்டாக்குகிறார் நமது முதலமைச்சர். கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம், ஜல்லிக்கட்டு மைதானம் இது எல்லாம் திமுக ஆட்சியில் வேகமான பணிகளுக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் என்ற தளம் இருக்கும்பொழுது இது போன்ற குறைகளை சொல்லத்தான் செய்வார்கள். ஆனால் எங்கள் பணி மக்கள் பணி. மக்களுக்கு தேவையான, மக்கள் விரும்புகின்ற தேவைகளை நிறைவேற்றி தரக்கூடிய முதன்மையான முதல்வராக நம்முடைய முதல்வர் திகழ்கிறார். மக்கள் இதனை நன்றாக அறிந்துள்ளனர் என்றார்.