புதுடெல்லி: வௌிநாட்டு மாணவர்களுக்கான ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற இணையதளத்தை ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தியாவில் சர்வதேச மாணவர்கள் கல்வி பயில்வதை எளிதாக்கும் விதமாக ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற இணையதளத்தை ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இளநிலை, முதுகலை, முனைவர் பட்ட படிப்புகள், யோகா, ஆயுர்வேதம் மற்றும் கவின்கலைகள் உள்ளிட்ட துறைகள் பற்றிய தகவல்களை, திட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “பல்வேறு பின்னணியில் உள்ள வௌிநாட்டு மாணவர்களை வரவேற்று, அவர்களுக்கான பதிவு, விசா அனுமதி ஆகியவற்றை தருகிறது. வௌிநாட்டு மாணவர்கள் விரும்பிய துறைகளை தேர்ந்தெடுத்து படிக்கவும், தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து சலுகைகளை பெறவும் உதவுகிறது” என்று தெரிவித்தார்.