இந்தியாவில் 3.5 டன் எடை வரையிலான மோட்டார் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பாரத் என்சிஏபி எனப்படும் புதிய கார் பாதுகாப்பு சோதனை திட்டத்தை ஒன்றிய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதனை தொடங்கி வைத்தார்.புதிதாக தயாரிக்கப்பட்ட கார்கள் விற்பனைக்கு வரும் முன்பு பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது.
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய சோதனை திட்டத்தின்படி, கார்களில் ஆட்கள் அமர்ந்திருப்பது போன்றே பொம்மைகளை வைத்து பின்னர் காரின் முன்பகுதி, பின்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் மோதச் செய்து சோதனை செய்யப்படும். இதற்கு பூஜ்யம் முதல் 5 வரை நட்சத்திர தரக்குறியீடு வழங்கப்படும். இதை வைத்து காரின் பாதுகாப்பு தரத்தை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும். ரூ.60 லட்சத்தில் இந்த வாகன பாதுகாப்பு சோதனையை நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.