புதுடெல்லி: இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் கனடா குடிமக்கள் அதிகளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறு சிவப்பு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி அசாம் மற்றும் மணிப்பூருக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள 10 கிமீ சுற்றளவில் இந்த பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு கனடா அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் 9 காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கங்கள் கனடாவில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறியதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 8 தனி நபர்களுக்கு கனடா புகலிடம் வழங்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பஞ்சாப் பாடகர் கொலை உட்பட இந்தியாவில் நடந்த பல தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்தும் கோரிக்கையை அந்த நாட்டு அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை என இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.