டெல்லி : இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா, கடந்த 2020 முதல் காணாமல் போன சுமார் 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை ஒன்றிய மற்றும் மாநில போலீசார் கண்டுபிடித்துவிட்டனர் என்றும் ஆனாலும் 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில் 45,585 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 3,955 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. பீகாரில் 24,000க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600க்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதே போல ஒடிசாவிலும் 24,291 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.