இஸ்லாமாபாத்: அதிகாலை 2.30 மணிக்கு போன் போட்ட ராணுவ தளபதி, நூர் கான் விமான தளம் தாக்கப்பட்டதாக தெரிவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் முதல்முறையாக ஒப்புக் கொண்டார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கதிகலங்கி இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, கடந்த 9ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட பல இலக்குகளை இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியது.
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த தாக்குதல்கள் குறித்து தெரிவித்தார்’ என்று கூறினார். எப்போதும் இந்தியா குறித்து முரணான தகவல்களை தெரிவித்து வரும் பாகிஸ்தான் பிரதமர், முதன்முறையாக இந்திய ராணுவ நடவடிக்கையை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தான் பிரதமரை நள்ளிரவில் எழுப்பி, இந்தியா தீவிரமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆபரேஷன் சிந்தூரின் துல்லியத்தையும், வலிமையையும் காட்டுகிறது’ என்று பதிவிட்டார்.
மேலும், சீன மற்றும் இந்திய நிறுவனங்களின் செயற்கைக்கோள் படங்கள், நூர் கான் விமானப்படை தளத்தில் ஓடுதளம் மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தை உறுதிப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
600 டிரோன்கள் அழிப்பு
பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை கொன்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி தொடங்கிய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆகாஷ், ஆகாஷ்தீர் உள்ளிட்ட உள்நாட்டு தயாரிப்பு வான்பாதுகாப்பு அமைப்புகளுடன், உயர் தொழில்நுட்பட கொண்ட பல அடுக்கு வான்பாதுகாப்பு வலையை இந்திய ராணுவம் உருவாக்கியது. இதனால், இந்திய ராணுவ தளங்கள் உட்பட முக்கிய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட டிரோன்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.