மும்பை: ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் மும்பை காவல்துறை தலைவருடன் ஆலோசனை நடத்தினர்.
2024 மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசை வீழ்த்தும் ஒரேநோக்கத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்பட 26 எதிர்க்கட்சிகள் கைக்கோர்த்துள்ளன. இந்த எதிர்க்கட்சிகளின் இரண்டாம் கூட்டம் பெங்களூருவில் நடந்தபோது கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயர் சூட்டப்பட்டது, ‘இந்தியா’ கூட்டணியின் 3வது மும்பையில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 80 முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் ‘இந்தியா’ கூட்டணிக்கான சின்னம் வௌியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் மும்பை காவல்துறை ஆணையர் விவேக் பன்சல்காலை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து மகாராஷ்டிரா சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே செய்தியாளர்களிடம் கூறும்போது, “பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் உள்பட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதால் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை ஆணையரை சந்தித்தோம்” என்று தெரிவித்தார்.