மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஏ – இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட்டில் வென்ற ஆஸி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே அபிமன்யூ ஈஸ்வரன், சாய் சுதர்சன் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து கே.எல்.ராகுல், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் த லா 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். அப்போது, 2.4 ஓவரில், இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 11 ரன் மட்டுமே எடுத்திருந்தது. அவர்களை தொடர்ந்து சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்த தேவதூத் படிக்கல் 26, நிதிஷ் ரெட்டி 16, பிரசித் கிருஷ்ணா 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
பின் வந்த, தனுஷ் கோடியன் 0, கலீல் அகமது 1ரன்னில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி தந்தனர். அதனால் இந்தியா முதல் இன்னிங்சில், 57.1 ஓவருக்கு 161 ரன்னில் சுருண்டது. இந்திய அணியில், துருவ் ஜூரல் மட்டும் பொறுப்பாக ஆடி, 80 ரன் விளாசினார். முகேஷ் குமார் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆஸி தரப்பில் மிக்கேல் நேசர் 4, பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட்களை வீழ்த்தி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். அதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17.1 ஓவரில் 2விக்கெட் இழப்புக்கு 53 ரன் சேர்த்தது. மார்கஸ் 26, சார் கொனஸ்டஸ் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாளான இன்று, இந்திய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி ஆஸி வீரர்களை கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.