புதுடெல்லி: கடந்த 11 ஆண்டு கால பாஜ ஆட்சியில் பல துறைகளிலும் இந்தியா விரைவான மாற்றத்தை கண்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கடந்த 2014ல் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து நேற்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: நல்லாட்சி மற்றும் மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது. தற்போதைய ஒன்றிய அமைச்சர்களில் 60 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இந்த அரசை தவறாக சித்தரிக்க முயலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் இது அரசின் சமூக நீதிக்கான நற்சான்றிதழை மேலும் மெருகேற்றும் செய்தி. எந்த அமைச்சரவையிலும் இவ்வளவு அதிகமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அங்கம் வகித்ததில்லை. பொருளாதார வளர்ச்சி முதல் சமூக மேம்பாடு வரை, மக்களை மையமாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
இதன் மூலம், வேகம், அளவு, உணர்திறன் மூலம் புரட்சிகரமான மாற்றங்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்படுத்தி உள்ளது. 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வதாம் மற்றும் கூட்டு பங்கேற்றால் வழிநடத்தப்படும் இந்தியா, பல்வேறு துறைகளில் விரைவான மாற்றங்களை கண்டுள்ளது. எங்கள் கூட்டு முயற்சியை பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். அதே சமயம் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் தொடர்ந்து முன்னேறுகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில், ‘‘மோடி அரசின் 11 ஆண்டுகால ஆட்சி, பொது சேவைக்கான உறுதிப்பாடு, முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பொற்காலம்.
பிரதமர் மோடி விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சிக்கான பணி கலாச்சாரத்தை உருவாக்கினார். மோடி ஆட்சியில் தேச பாதுகாப்பு புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. நக்சலிசம் அதன் கடைசி கட்டத்தில் உள்ளது. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்தியா இப்போது தீவிரவாதிகளின் வீடுகளுக்குள் நுழைந்து பதிலடி தருகிறது. இது மோடி ஆட்சியில் இந்தியா மாறி வருவதை காட்டுகிறது’’ என்றார். பிரதமர் மோடி நாட்டின் அரசியல் கலாச்சாரத்தையே மாற்றியிருப்பதாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.