டெல்லி: இந்தியாவில் முப்படைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சத் தொடங்கி இருக்கின்றனர். உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து தரப்பிலும் பெண்களின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. அந்த வரிசையில் இந்திய முப்படைகளிலும் அதாவது ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் பெண்கள் சேரும் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக 2 பெண் அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார்கள். இதையடுத்து முப்படைகளில் அதிகாரிகளாக, போர் பிரிவில் பணியாற்றுபவர்களாக பலர் சேர்ந்து வருகின்றனர். அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதன்படி, கடந்த 2014ம் ஆண்டில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 3 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை என்பது 11 ஆயிரத்தையும் கடந்து சென்றுவிட்டதாகவும், இது கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு வரை அதிகரித்து வந்திருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெண்கள் இப்போது ராணுவம், கடற்படை, விமானப்படை சீருடையில் நிமிர்ந்து நிற்கிறார்கள்.