இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் வணிக வளாகம் வழியாக செல்லும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக சென்னையில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 9 மாடி வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் நிலையத்தின் வடிவமைப்பு திட்டத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டிடத்தின் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது.
9 மாடிகளை கொண்ட 3 கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டிடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது.