பாரிஸ்: பிரான்சின் பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் ரபேல் போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. உலகின் தற்போதைய சிறந்த போர் விமானங்களில் ரபேலும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமானம் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாள் நடந்த போரின் போது, இந்தியாவின் 3 ரபேல் விமானங்கள் உட்பட 5 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சீனா வழங்கிய வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் அழித்ததாக கூறியது.
இந்தியா போர் விமானங்களை இழந்ததை ஒப்புக் கொண்டாலும், எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. இப்போரில் ஒரு ரபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் கூறுகிறது. போரில் ரபேல் விமானத்தின் இழப்பு இதுவே முதல் முறை. இதனை வைத்து சீனா பல பொய்யான தகவல்கள் பரப்புவதாக பிரான்ஸ் உளவுத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
ஆசியாவில் பல நாடுகளும் ரபேல் விமானத்தை வாங்க விரும்புகின்றன. இதுவரை 533 விமானங்களை பிரான்ஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால் ரபேல் விமானங்களின் மதிப்பை குறைத்து அதை விட தங்களின் போர் விமானங்கள் சக்திவாய்ந்தவை என சீனா கூறி வருகிறது. மேலும், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் ரபேல் விமானங்களின் பாகங்கள் என பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பும் வேலையையும் சீனா செய்வதாக உளவுத்துறை கண்டறிந்ததாக பிரான்ஸ் ராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.