புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கலந்துரையாடினார். அப்போது, வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விளக்க படங்களை எம்பிக்களிடம் காட்டி விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து எம்பிக்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) இந்தியாவின் டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்திய பின்னரே ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டது. இது இருதரப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு. இதில், அமெரிக்காவின் மத்தியஸ்தம் என்ற கேள்விக்கே இடமில்லை.
இந்தியாவின் தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியது. அப்போது, இந்தியாவுடன் நேரடியாகப் பேச வேண்டுமென பாகிஸ்தானுக்கு அமெரிக்க தரப்பு தெளிவாக கூறி உள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா இந்தியாவிடம் வலியுறுத்தியது. அதற்கு, தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக செயல்பட முடியாது என பதிலளிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பாகிஸ்தான் படைகளின் மன உறுதியை வெகுவாக பாதித்துள்ளது. அதே சமயம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம் மட்டுமே. அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினால், இந்தியா திருப்பிச் சுடும் என்றும் பாகிஸ்தான் டிஜிஎம்ஓவிடம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை வெளிப்படுத்துவதில் அனைத்து எம்பிக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
அதனால்தான் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்ல பல்வேறு நாடுகளுக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை ஒன்றிய அரசு அனுப்பி உள்ளது. பாகிஸ்தான் பிரச்சாரத்தால் எம்பிக்கள் ஏமாறக் கூடாது. அவர்கள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ள நிலையில், சீனா, அஜர்பைஜான் மற்றும் துருக்கி போன்ற மிகச் சில நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுடன் இணைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.