Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்தியா-நியூசிலாந்து இடையே இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு: பிரதமர்கள் மோடி-லக்சன் சந்திப்பில் முடிவு

ஆக்லாந்து: இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து 3 நாடுகள் பயணத்தின் கடைசி கட்டமாக பிரதமர் மோடி நியூசிலாந்துக்கு நேற்று முன்தினம் சென்றார். இந்நிலையில், பிரதமர்கள் மோடி-லக்சன் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இந்த சந்திப்பில் 10 ஒப்பந்தங்கள் உட்பட 18 முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.

குறிப்பாக, சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான இருதரப்பு வர்த்தகத்தை 2030ம் ஆண்டிற்குள் 7 பில்லியன் நியூசிலாந்து டாலர்கள் (சுமார் ரூ. 35,000 கோடி) என்ற அளவிற்கு இரட்டிப்பாக்கும் இலக்கை நோக்கிப் பணியாற்ற இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வருவதை உறுதிசெய்ய ஒன்றிணைந்து செயல்படவும் உறுதியளித்தனர். இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, அடுத்த 4 ஆண்டுகளில் உறவுகளை விரிவுபடுத்துவதற்கான செயல்திட்டம், இந்தோ-பசிபிக் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு மற்றும் இந்திய கடற்படைக்கும் நியூசிலாந்து பாதுகாப்பு படைக்கும் இடையிலான பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்தம் ஆகியவையும் அடங்கும்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘‘இரு நாட்டு உறவை உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம். தெளிவான இலக்குகள் மற்றும் உறுதியான முடிவுகளுடன் ஒவ்வொரு துறையிலும் நாங்கள் முன்னேறிச் செல்வோம்’’ என நம்பிக்கை தெரிவித்தார். இத்துடன் 3 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.