ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘இந்தியா உங்களுடைய தந்தையின் நாடா? இந்த நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. இந்தியா என்பது ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறது. பாரத், இந்தியா, இந்துஸ்தான் என்றெல்லாம் கூறுகிறோம். நாட்டின் பெயரை மாற்ற யாருக்கும் அதிகாரமில்லை. ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களில் இந்தியா என்ற பெயர் இல்லையா? ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்தவுடன், இந்தியாவை ‘பாரத்’ என்று பெயர் மாற்றுவோம் என்றார்கள்.
அதேநேரம் எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு ‘பாரத்’ என்று பெயரிட்டால், அப்போது நீங்கள் (பாஜக) இந்தியாவின் பெயரை மாற்றுவீர்களா?. எச்சரிக்கையாக இருங்கள். இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால், 140 கோடி இந்தியர்கள் ஒன்று கூடி பாஜகவினரை இந்த நாட்டை விட்டே துரத்துவார்கள். உங்களுக்கு நான் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் நாட்டின் பெயரை மாற்றுங்கள் பார்ப்போம்’ என்று கூறினர்.