சென்னை: ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்தியா-ஜப்பான், மலேசியா கொரியா அணிகள் விளையாட உள்ளன. இன்று முதலில் நடைபெறும் 5, 6வது இடங்களுக்கான ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்த பாகிஸ்தான், சீனா அணிகள் களம் காண உள்ளன. வெற்றியுடன் விடை பெற பாகிஸ்தான் முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டமும் சீனாவுக்கு சிக்கல்தான்.
தொடர்ந்து நடைபெறும் முதல் அரையிறுதியில் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்த மலேசிய அணியும், 3வது இடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் கொரிய அணியும் மோதுகின்றன. ஏற்கனவே லீக் சுற்றில் கொரியாவின் கடும் சவாலை எதிர்க்கொண்டு மலேசியா வென்றுள்ளது. அதேபோல் 2வது அரையிறுதியில் புள்ளிப்பட்டியில் முதல் இடம் பிடித்த இந்திய அணி, ஜப்பானை எதிர் கொள்கிறது. லீக் சுற்றில் தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வென்ற இந்தியா ஒரே ஒரு ஆட்டத்தில் ஜப்பானிடம் மட்டும் டிரா செய்தது.
* நேருக்கு நேர்
இந்தியா-ஜப்பான் இந்த 2 அணிகளும் இதுவரை 34 சர்வதேச ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் இந்தியா 27 ஆட்டங்களில் வென்று அசத்தியுள்ளது. ஜப்பான் 3 ஆட்டங்களில் வெல்ல, எஞ்சிய 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. மலேசியா-கொரியா இந்த 2 கிழக்காசிய நாடுகளும் 31 சர்வதேச ஆட்டங்களில் இது வரை மோதியுள்ளன. அவற்றில் 16 ஆட்டங்களில் கொரியாவும், 10ஆட்டங்களில் மலேசியாவும் வென்றுள்ளன. மீதி 5 ஆட்டங்கள் டிராவாகி உள்ளன. பாகிஸ்தான்-சீனா இந்த 2 அணிகளும் இது வரை மோதிய 7 ஆட்டங்களிலும் பாகிஸ்தானே வென்று சாதித்துள்ளது.
பெனால்டி கார்னர்
*இதுவரை நடந்த 12 ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா 8 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி 3 முறை கோப்பையை வென்றுள்ளது.
* நடப்பு சாம்பியன் கொரியா இதுவரை 5 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, அந்த 5முறையும் கோப்பையை வசப்படுத்தி உள்ளது.
* மலேசியா தொடர்ந்து 2 முறை மட்டுமே இறுதி ஆட்டத்தில் விளையாடி உள்ளது. இந்த முறை இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தால் அது ஹாட்ரிக் சாதனையாக இருக்கும்.
* ஜப்பான், இதுவரை இறுதி ஆட்டத்தில் விளையாடியதில்லை
* சீனாவும் இதுவரை பைனலில் ஆடியதுமில்லை, இந்த முறை அந்த வாய்ப்புமில்லை. பாகிஸ்தான் 6முறை பைனலில் விளையாடி அவற்றில் 3 முறை சாம்பியனாகி உள்ளது.
* ஆசிய கோப்பை அரையிறுதியில் இன்று இந்தியா 11வது முறையாகவும், கொரியா 10வது முறையாகவும், மலேசியா 9வது முறையாகவும், ஜப்பான் 6வது முறையாகவும் விளையாடுகின்றன.