உலகெங்கும் கைத்தறி நெசவாளர்கள் நிறைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் நலிந்துவிட்டது. கைத்தறி உடைகளுக்கு என தனிப்பட்ட அங்கீகாரம் கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கான வாழ்வாதாரமும் ஏற்படுத்தி வருகிறார்கள் நண்பர்களான ஜவஹர் மற்றும் கலைவாணி. இவர்கள் சென்னை, ஆழ்வார்பேட்டையில் ‘அவிஷா’ என்ற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபல கைத்தறி உடைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.
‘‘நானும் கலைவாணியும் அலுவலக நண்பர்கள். அவிஷா 2016ல் துவங்கினோம். அதற்கு முன்பு ஆறு மாதக் காலம் கைத்தறிக் குறித்து நிறைய ஆய்வுகளை மேற்கொண்டோம். சொல்லப்போனால் இந்தியா முழுக்க கைத்தறி உடைகளை தயாரிக்கும் நெசவாளர்களை சந்தித்து அவர்களிடம் இதுகுறித்து தெரிந்து கொண்டோம். இந்த ெதாழிலுக்கு வரும் முன்பு நான் 25 வருஷம் கார்ப்பரேட் நிறுவனமான மஹிந்திராவில் வேலை பார்த்து வந்தேன். அங்கு நான் ஸ்டார்டப் நிறுவனங்கள் அமைக்கும் குழுவில் இருந்தேன்.
அதன் பிறகு மார்க்கெட்டில், விற்பனை துறை என கிட்டத்தட்ட 25 வருடம் வேலை பார்த்துவிட்டேன். நல்ல வேலை கை நிறைய சம்பளம் என்று இருந்தாலும், என்னுடைய மனதில் ஆரம்பத்தில் இருந்தே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அப்போது எதில் ஈடுபடுவது, என்ன செய்வது என்ற புரிதல் இல்லாமல் இருந்தது. அந்த சமயத்தில் இது குறித்து நான் கலைவாணியிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர்களுக்கும் அதே போன்ற திட்டம் இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு தான் நாங்க இருவரும் இணைந்து செயல்படலாம்ன்னு முடிவு செய்தோம்.
என்ன பிசினஸ் செய்யலாம்ன்னு நானும் கலையும் நிறைய ஆலோசனைகள் செய்தோம். நாங்க இருவருமே ஸ்டார்டப் துறையில் இருந்ததால், அதில் பல வாடிக்கையாளர்கள் எங்களுக்கு பரிச்சயமாக இருந்தனர். அதில் ஒருவர் காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவைகளை விற்பனை செய்து வந்தார். அவரிடம் பேசிய போதுதான் கைத்தறிப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம். காஞ்சிபுரம் பட்டு மட்டுமில்லாமல் அனைத்து ரக கைத்தறி ஆடைகள் மற்றும் புடவைகளை கொண்டு வர திட்டமிட்டோம். அப்படித்தான் அவிஷா உருவானது. இதில் கலைவாணி அவிஷாவின் கோ-பவுண்டராக உள்ளார்’’ என்றவர் இந்தியாவில் உள்ள அனைத்து கைத்தறி ஆலைகளில் தயாரிக்கப்படும் பிரத்யேக கைத்தறி புடவை மற்றும் உடைகளை ஒரே கூரைக்குள் குவித்து வைத்துள்ளார்.
‘‘இந்தியாவில் மத்தியப்பிரதேஷ், மகாராஷ்ட்ரா, குஜராத், கொல்கத்தா, அசாம், சேலம், மதுரை என பல இடங்களில் இன்றும் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். போச்சம்பள்ளி இக்கத், பனாரஸ், காஞ்சிபுரம் பட்டு, கத்வால், பெங்கால் காட்டன், லம்பானி, கசாவு, கலம்காரி, இக்கல், மதுரை சுங்குடி, தர்மாவரம், மங்கலகிரி, நாராயண்பேட், காந்தா, மதுபானி என அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப சிறப்பு கைத்தறி உடைகள் உள்ளன. இதற்கான கைத்தறி ெநசவாளர்கள் இந்தியா முழுக்க பரவி உள்ளனர்.
மேலும் இவை கைத்தறி என்பதால், இவர்கள் அனைவரும் அதனை சிறிய அளவில் தான் செய்து வருகிறார்கள். சிம்பிளான கைத்தறி புடவை நெய்ய ஒரு வாரமாகும். அதுவே கிராண்ட் டிசைன்கள் கொண்ட பட்டுப்புடவையினை நெய்ய நான்கு மாசம் கூட எடுக்கும். நம்முடைய மரபுக் கலையில் இருந்து உடைகள் வெளிவரும் போது, பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதனாலேயே நாங்க எங்க மனதினை அதற்கு பறி கொடுத்தோம்னுதான் சொல்லணும்’’ என்றவர் ஆன்லைன் முறையில்தான் முதலில் தங்களின் விற்பனையினை துவங்கியுள்ளார்.
‘‘நாங்க எங்களின் ஆன்லைன் விற்பனையினை ஆரம்பிக்கும் முன் இந்தியாவில் உள்ள பல்வேறு நெசவாளர்களை சந்தித்து அவர்களின் உடைகளை விற்பனைக்காக பேசினோம். அவர்களும் சம்மதிக்க அதன் பிறகு இணையம் ஒன்றை துவங்கி அதில் நெசவாளர்களிடம் உள்ள அனைத்து டிசைன்களையும் அப்லோட் ெசய்ேதாம். எங்களுக்கு இந்தியாவை விட சர்வதேச அளவில் இருந்துதான் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. காரணம், நம்மூர் பாரம்பரிய கைத்தறி உடைகள் வெளிநாடுகளில் கிடைப்பதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் உள்ள இந்தியர்கள் எங்களின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள்.
காரணம், அவர்களால் இது போன்ற புடவை மற்றும் உடைகளை இந்தியா வரும் போதுதான் வாங்க முடியும் என்பதால் பலர் இணையத்தில் வாங்க ஆரம்பித்தார்கள். எங்களிடம் இருக்கும் ஒவ்வொரு புடவையும் தனிப்பட்ட டிசைன்கள் மற்றும் வண்ணங்கள் கொண்டவை என்பதால் ஒவ்வொன்றுமே யூனிக் கலெக்ஷன் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாம் நல்லபடியா சென்ற நிலையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு வருடம் எங்க தொழிலிலும் பின்னடைவு ஏற்பட்டது. திருமணம், கொண்டாட்டம் என்று எதுவுமே இல்ைல. அப்படியே இருந்தாலும் 50 பேர்கள் மட்டுமேதான் கலந்து ெகாள்ள முடியும் என்ற நிலை என்பதால், உடைகளுக்கு பெரிய அளவில் செலவிடவும் விரும்பவில்லை. அது எங்களுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் இந்த தொழில் துவங்க நானும் கலைவாணி இருவருமே எங்களின் சேமிப்பை தான் முதலாக போட்டிருந்தோம்.
வரும் லாபத்தில்தான் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுத்து வந்தோம். ஆனால் அதற்கே சிக்கலாகிப் போனது. மீண்டும் இது போன்ற நிலை ஏற்பட்டாலும், நாங்க இந்த சிக்கலை சந்திக்கக்கூடாது என்று முடிவு செய்தோம். நிலைமை கொஞ்சம் சீரானதும் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய நிறுவனம் மூலமாக எங்களின் தொழிலுக்கு நிதி ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு 2022ல் இருந்து எங்களின் தொழிலை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டோம். அதன் அடிப்படையில் விளம்பரங்கள் கொடுத்தோம்.
மக்கள் மத்தியில் அவிஷா குறித்து தெரியப்படுத்தினோம். எல்லாவற்றையும் விட மக்கள் நேரடியாக உடைகளை தொட்டுப் பார்த்து வாங்க வேண்டும் என்று முடிவு செய்துதான் எங்களின் முதல் ஷோரூமினை சென்னை ஆழ்வார்பேட்டையில் துவங்கினோம். இங்கு டசர், லெனின், பனாரஸ், பட்டு, காட்டன் என 100க்கும் மேற்பட்ட கைத்தறி உடைகள் உள்ளன. 1500 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை இங்கு புடவை மட்டுமில்லாமல் சுடிதார், குர்தா போன்ற உடைகளும் உள்ளன. அடுத்து இதில் லெஹங்காவும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்’’ என்றவர் கைத்தறி உடைகள் எவ்வாறு தயாராகிறது என்பது பற்றி விவரித்தார்.
‘‘இந்தியா முழுக்க நாலு மில்லியன் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். விவசாயத்திற்கு பிறகு அதிகம் செய்யக்கூடிய தொழில். ஆனால் அதற்கான வருமானம் மிகவும் குறைவு. அவர்களைப் போல் ஒரு புடவையை அழகாக தயாரிக்க முடியாது. இந்த ெதாழிலில் 60% பெண்கள்தான் ஈடுபட்டு வராங்க. அதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு மட்டுமில்லாமல் அவர்களின் கலையினை மேம்படுத்த வேண்டும் என்று விரும்பிதான் நாங்க இந்த தொழிலை துவங்கினோம். இவர்களுக்கு என தனிப்பட்ட சங்கம் இயங்கி வருகிறது. அதன் மூலம் அரசும் இவர்களுக்கு உதவி செய்து வருகிறது. நாங்க ஒவ்வொரு இடங்களுக்கு சென்று எங்களுக்காக வேலை செய்பவர்களை தேர்வு செய்தோம். அதன் பிறகு அவர்களுக்கு ஆர்டர் கொடுத்தோம்.
கைத்தறியில் போடப்படும் டிசைன்கள் அவர்கள் பாரம்பரியமாக காலங்காலமாக செய்து வருகிறார்கள். அக்ரக் என்ற டிசைன் 100 வருஷம் மேலானது. அதேபோல்
காஞ்சிபுரம் பட்டு 400 வருஷம் பாரம்பரியம் கொண்டது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் இருந்தே இருக்கிறது. நாங்க அவர்களின் பாரம்பரிய டிசைன்கள் மட்டுமில்லாமல் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப லேட்டெஸ்ட் டிசைன்களும் செய்து தரச்சொல்கிறோம். கைத்தறியை பொறுத்தவரை அதை கஸ்டமைஸ் செய்வது அவ்வளவு சுலபமில்லை. ஒவ்ெவாரு புடவையுமே வித்தியாசமா இருக்கும். காரணம், ஒரு முறை தறி கட்டிவிட்டால் அதே டிசைனை மறுபடியும் கொண்டு வர முடியாது. ஆனால் பவர் லூம் பொறுத்தவரை ஒரே டிசைனில் 40 புடவைகள் கூட நெய்ய முடியும்.
கைத்தறியில் முதலில் புடவைக்கான நூலை வாங்கணும். என்ன நிறத்தில் புடவையை நெய்ய போகிறோமோ அதற்கு ஏற்ப நூல்களை தறியில் கட்டணும். ஒரு தறி கட்டினால் மூன்று விதமான புடவைகளை கொண்டு வரலாம். அதாவது தறியின் அகலம், நீளம் மற்றும் நிறத்திற்கு ஏற்ப வண்ண நூல்களை கட்ட வேண்டும். அதாவது ஒரு நிறம் மட்டும் பொதுவாக இருக்கும். அதனுடன் மற்ற மூன்று நிறங்களை இணைத்து மூன்று புடவைகளாக நெய்வார்கள். உதாரணத்திற்கு நீல நிறம் பொதுவான நிறம் என்றால், அதனுடன் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற நூல்கள் இணைத்து மூன்று நிற காம்பினேஷன் புடவைகளை நெய்வார்கள்.
கைத்தறி பொறுத்தவரை நாங்க ஸ்டாக் தீர தீர ஆர்டர் தரமாட்டோம். தினமும் ஆர்டர் கொடுத்தால்தான் எப்போதும் புது புடவைகள் இருந்து கொண்டே இருக்கும். பண்டிகை சீசன் வேற ஆரம்பிச்சிடுச்சு. அதனால் அதற்கு ஏற்ப புது கலெக்ஷன் ஸ்டாக் செய்ய துவங்கிடுவோம். எதிர்கால திட்டம் ஆழ்வார்பேட்டை கடையினை தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் அடுத்த ஆறு மாசத்தில் மற்றொரு கிளை ஆரம்பிக்க இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து பெங்களூரூ, ஐதராபாத் போன்ற இடங்களிலும் எங்களின் கிளைகளை திறக்கும் திட்டம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை எந்த தொழில் வேண்டுமானாலும் துவங்கலாம். அதுகுறித்து தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அதற்கான ஈடுபாடும் முதலீடு செய்யக்கூடிய வலிமையும் இருந்தால் போதும்’’ என்றார் ஜவஹர்.
தொகுப்பு: ப்ரியா