ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிலவின் தென் துருவத்தில் இந்தியா, முதல் நாடாக விக்ரம் லேண்டரை தரையிறக்கி இன்று சாதனை படைத்த நாள் ஆகும். இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி நிலவுக்கு சந்திரயான் -3 விண்கலத்தை அனுப்பியது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவின் தென்துருவத்தை அடைய இந்த விண்கலம் 40 நாட்கள் எடுத்துக்கொண்டது.
தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக மென்மையான முறையில் தரை இறங்கியது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையிடத்திற்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று விஞ்ஞானிகளை பாராட்டியதுடன், நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர், இறங்கிய இடத்தை ‘சிவசக்தி முனை’ என்று அழைக்கவும், இந்த தினத்தை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடவும் உத்தரவிட்டார்.
இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தேசிய விண்வெளி தினத்தின் முதல் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று டெல்லியில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பிரக்யான் ரோவர் நிலவில் தங்கியிருந்து 14 நாட்கள் ஆய்வு செய்த விவரங்களை இஸ்ரோ இந்த விழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.