லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில், 55 ஓவர் முடிவில் இங்கிலாந்து, 4 விக்கெட் இழந்து 256 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன் எடுத்தது. அதற்கு பதிலடியாக இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. பின் 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்று முன்தினம் 364 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், 371 ரன் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லியையும், பென் டக்கெட்டையும் பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறிக் கொண்டிருந்த சமயத்தில், 43வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா, ஜாக் கிராவ்லியை (65 ரன்) அவுட்டாக்கினார். பின் வந்த ஒல்லி போப்பையும் (8 ரன்), 45வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வெளியேற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 206. பின் ஜோ ரூட் களமிறங்கினார்.
பென் டக்கெட்டும், ஜோ ரூட்டும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்நிலையில், ஷர்துல் தாக்குர் வீசிய 55வது ஓவரில் பென் டக்கெட் (170 பந்து, 1 சிக்சர், 21 பவுண்டரி, 149 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்த ஹாரி புரூக், அடுத்த பந்திலேயே ரன் எடுக்காமல் வீழ்ந்து அதிர்ச்சி தந்தார். பின்னர், பென் ஸ்டோக்ஸ் ஆட வந்தார். 55 ஓவர் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 11, பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.