புனே: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில், இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பை தொடரில், ரோகித் தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியதால் ரோகித் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். வங்கதேசத்தை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இந்தியா இன்று களமிறங்குகிறது. இதுவரை களமிறக்கப்படாத வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி, அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமாருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடமும், பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா நெதர்லாந்திடமும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்திருப்பதால், இந்திய வீரர்கள் கவனமாக விளையாடுவது அவசியம். கொஞ்சம் அலட்சியம் காட்டினாலும்… இந்த வரிசையில் இடம் பிடிக்க வேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதிலும், கடந்த 12 மாதங்களில் வங்கதேசத்துடன் மோதிய 4 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 3 தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை ஆட்டிப் படைத்தது. அடுத்த 2 ஆட்டங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடம் அடிபணிந்தது. அதனால் அந்த அணியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று களம் காண்கிறது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், புனேவில் அனல் பறப்பது உறுதி.
* இரு அணிகளும் 40 சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளதில் இந்தியா 31-8 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (ஒரு ஆட்டம் ரத்து).
* ஐசிசி உலக கோப்பை ஆட்டங்களில் இந்தியா 4-1 என முன்னிலை வகிக்கிறது.
* இந்தியாவுடன் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் வங்கதேசம் 3 வெற்றிகளை ருசித்துள்ளது.
* புனேவில் இதுவரை நடந்த 7 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா, அவற்றில் 4ல் வென்றுள்ளது.
* இங்கு முதலில் பேட்டிங் செய்த அணி 4 வெற்றியும், சேஸ் செய்த அணி 3லும் வென்றுள்ளன.
* வங்கதேசம் இதுவரை புனேவில் விளையாடியது இல்லை.
* இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்) கே.எல்.ராகுல், இஷான் கிஷன் (கீப்பர்கள்), ஆர்.அஷ்வின், ஹர்திக் பாண்டியா, விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் வங்கதேசம்: ஷாகிப் அல் அசன் (கேப்டன்), நஜ்மல் உசைன் (துணை கேப்டன்), லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்கள்), தன்ஜித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிதய், மெஹேதி ஹசன், மகமதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் முகமத், முஸ்டாபிசுர் ரகுமான், நசும் அகமத், ஷோரிபுல் இஸ்லாம், தன்ஜிம் ஹசன், தஸ்கின் அகமத்.